மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் கிழக்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வான பராக் ஷா, அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ தவறான திசையில் (Wrong side) வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ பராக் ஷா, அந்த ஆட்டோ டிரைவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரைப் பலமுறை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

பராக் ஷா மகாராஷ்டிராவின் மிகவும் வசதியான எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜக எம்.எல்.ஏ-க்கள் அதிகார மமதையில் ஏழை எளிய மக்களைத் துன்புறுத்துவதாகவும், சட்டத்தைக் கையில் எடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், ஆட்டோக்கள் தவறான திசையில் வருவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் நலன் கருதியே தான் போராடியதாகவும் பராக் ஷா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.