தமிழக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் இரு மொழி கல்விக் கொள்கைதான் என்றென்றும் பின்பற்றப்படும் என்று திமுக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு கொடுத்து தமிழக பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று பாஜகவினர் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழி கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்து போட வற்புறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில் இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.

இது சர்ச்சையாக மாறிய நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவு கொடுக்குமாறு கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் இது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது, மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு கொடுக்குமாறு நாங்கள் எந்த இடத்திலும் மாணவர்களை கட்டாயப்படுத்தவில்லை. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தான் வரிசையில் நின்று நாங்கள் கையெழுத்து போடுவோம் என்று கூறி கையெழுத்து போடுகிறார்கள். மேலும் ஆர்வமுடன் வரும் மாணவர்களை இங்கு வரக்கூடாது என்று நாங்கள் எப்படி கூற முடியும் என்று கூறினார்.