தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு கேபிள் டிவி இணைப்பு 36 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 21 லட்சமாக குறைந்துவிட்டது. சேவை குறைபாடு இதற்கு காரணமாக கூறப்படும் நிலையில் அரசு கேபிள் மூலமாக 160 சேனல்கள் ஒளிபரப்பாகும் என்றாலும் பெரும்பாலான சேனல்கள் சரியாக தெரிவதில்லை. ஒளிபரப்பிலும் துள்ளியம்மில்லை எனவும் கட்டணத்திலும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் தனியார் கேபிள்களுக்கு வாடிக்கையாளர்கள் மாறி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு கேபிள் டிவி இணைப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, செட்டாப் பாக்ஸ் பற்றாக்குறையை போக்க முதல் கட்டமாக 5 லட்சம் செட் டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதேசமயம் இணைப்பு ஏதும் இல்லாத இன்டர்நெட் வழியாக இயங்கும் ஐபி டிவி தொழில்நுட்பத்தில் களமிறங்குவதற்கு அரசு கேபிள் டிவி நிர்வாக முடிவெடுத்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஜியோ மற்றும் ஆற்றல் போன்ற நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் இணைய செயல்பாடு உள்ளதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க முடியும் என கூறியுள்ளனர்.