வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் நவம்பர் 2ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு (தவெக) அழைப்பு விடுக்கப்படவில்லை என அக்கட்சியினர் புகார் தெரிவித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று (அக். 29) திமுக சார்பில் அதன் முக்கிய நிர்வாகியான பூச்சி முருகன், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அங்கு அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க, தவெகவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். இதன் மூலம், தவெகவும் முதன்முறையாக மாநில அளவிலான ஒரு முக்கிய அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தவெக பங்கேற்குமா என்பது குறித்து அக்கட்சி தலைமை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
