சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை என்றும், சில தனிமனிதர்களின் சதியாலும், மின்கருவிகளின் பழுதாலும்தான் மின்தடை ஏற்படுவதாகவும் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

​அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு கூறும் இந்த காரணங்களை ஏற்க முடியாது என அன்புமணி தெரிவித்துள்ளார். எத்தனை தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், அவற்றைக் கடந்து மக்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும், காரணங்களைக் கூறுவதை விடுத்து மின்வெட்டை முற்றிலுமாகத் தடுக்க மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.