மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் நடத்துனர் உயிரிழந்த சம்பவத்தில், அலட்சியமாக வாகனத்தை இயக்கியதாகக் கைது செய்யப்பட்ட பெஸ்ட் பேருந்து ஓட்டுநருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அந்தேரியின் ஜே.பி. சாலையில் உள்ள ராஜ்குமார் பேருந்து நிறுத்தம் அருகே மரம் விழுந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் மூன்று பேருந்துகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.

அப்போது பின்னால் வந்த நான்காவது பெஸ்ட் பேருந்து, முன்னால் நின்ற பேருந்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தின் காரணமாக பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில், போக்குவரத்து நெரிசலுக்கான காரணத்தை அறிய பேருந்தை விட்டு கீழே இறங்கி நின்றுகொண்டிருந்த சேகர் பாபுராவ் ராவ்தே என்ற 52 வயது நடத்துனர் இரு பேருந்துகளுக்கு இடையில் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

“>

இந்தக் கொடூர விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நான்காவது பேருந்தை அஜாக்கிரதையாகவும் அலட்சியமாகவும் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை உடனடியாகக் கைது செய்தனர். எனினும், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த நடத்துனர் ராவ்தே விபத்திற்குப் பிறகு கூப்பர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.