உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள கச்நேவ் கிராமத்தில், திருமணமான 26 நாட்களிலேயே 13 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோகிணி என்ற அந்த சிறுமி, தனது கணவனுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த போது திடீரென விஷம் குடித்துவிட்டு, “அம்மா, நான் மருந்து குடிச்சிட்டேன்” என கதறியபடி தாயிடம் ஓடி வந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் அந்த சிறுமிக்கு 18 வயது என அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் பொய் கூறியுள்ளனர். ஆனால், போலீசார் ஆதார் கார்டை சோதித்த போது, திருமணத்தின் போது அந்த சிறுமிக்கு வெறும் 13 வயது 3 மாதம் மட்டுமே ஆகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தந்தை இறந்த சோகத்தில் அந்த சிறுமி மன உளைச்சலில் இருந்ததாக அவரது 18 வயது கணவன் கூறியுள்ள நிலையில், குழந்தை திருமணம் மற்றும் சிறுமியின் மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
