மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள இல்லத்தை, ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்துள்ளனர். சுமார் 1.60 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி உள்ளதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்தச் சொத்திற்கான வரி செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோருக்குப் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் இந்த இறுதி நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, 90% வட்டி தள்ளுபடி அளிக்கும் ‘ஒரே முறை தீர்வு’ (OTS) திட்டத்தின் காலக்கெடு இன்றுடன் (மார்ச் 31) முடிவடைவதால், மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்தச் சம்பவம் அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
