சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ‘ஃப்ரோசன் பாட்டில்’ கடையில் வாங்கப்பட்ட ஒரு சீல் செய்யப்பட்ட போபா பான பாட்டிலில் கண்ணாடித் துண்டு இருப்பதால், அதை ஐஸ் கட்டி என தவறாக நினைத்து வாயில் வைத்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஏப்ரல் 27-ம் தேதி நிகழ்ந்ததாகவும், சிறுமியின் தாயார் ஜான்வி சங்கவி LinkedIn-ல் பதிவு செய்து தன்னுடைய கோபத்தையும் கவலையையும் தெரிவித்தார். சிறுமி அதை உடனே விழுங்கவில்லை என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது எனவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஃப்ரோசன் பாட்டில் நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட அவர், சந்தைப்படுத்தல் தலைவர் விபுல் சவுத்ரியால், மருத்துவ செலவுகள் ஏற்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும், அனைத்து மருத்துவ ஆவணங்களும் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் 20 நாட்கள் கடந்தும் எந்த பதிலும் வராததோடு, அவருடைய அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களும் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், “நாங்கள் மாதத்திற்கு 2.5 கோடிக்கும் மேற்பட்ட பாட்டில்களை விற்பனை செய்கிறோம், இந்த ஒரு சம்பவம் எங்களை பாதிக்காது” என்ற நிர்வாக பதிலில் பெரும் அலட்சியம் உள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜான்வி சங்கவி, இச்சம்பவம் தனிப்பட்டது மட்டுமல்ல, அனைத்து நுகர்வோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு எனக் கூறி, உணவு மற்றும் பானத் துறையில் கடுமையான தரக் கட்டுப்பாடு, நிறுவன பொறுப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இதற்காக நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி, பொதுமக்கள் பெரும் ஆதரவை வெளியிட்டு, நிறுவனத்தின் செயல் முறையை கண்டித்துள்ளனர்.