தமிழக மண்ணில் ஊடுருவியுள்ள தேச விரோத சக்திகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி அருண்ராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை, மாநிலத்தின் பாதுகாப்பு குறித்த முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது. திருப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறிப்பாக, டெல்லி போலீசார் வந்து திருப்பூரில் அதிரடி நடவடிக்கை எடுக்கும் வரை, மாநில உளவுத்துறைக்கும் காவல்துறைக்கும் இது குறித்து எந்தத் தகவலும் தெரியாமல் போனது நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது என்று அவர் விமர்சித்துள்ளார். பரபரப்பான தொழில் நகரங்களில் வெளிநாட்டினர் போலி ஆவணங்கள் மூலம் நீண்டகாலமாகத் தங்கியிருப்பது, ஆளுங்கட்சியின் மெத்தனப் போக்கிற்குச் சான்றாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தமிழகத்தை ‘அமைதிப் பூங்கா’ என்று வெறும் மேடைப் பேச்சோடு நிறுத்திவிடாமல், சமூக விரோத சக்திகள் ஊடுருவுவதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார். உளவுத்துறையை அரசியல் பழிவாங்கல்களுக்குப் பயன்படுத்துவதை விடுத்து, மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவரது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டினர் மிக எளிதாகப் போலி ஆதார் கார்டுகளைப் பெற்று குடியேறுவது அரசு இயந்திரத்தின் மீதான பிடி தளர்ந்துள்ளதைக் காட்டுவதாகவும், அந்நியச் சக்திகள் தமிழக மண்ணைப் புகலிடமாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
