மகாராஷ்டிர மாநில அரசுப் பள்ளிகளின் மோசமான நிலையைக் கண்டித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தாதா பூசே உடனடியாகப் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே கோரிக்கை விடுத்துள்ளார். ‘அரசுப் பள்ளிகளை மேம்படுத்துங்கள்’ என்ற பிரச்சாரத்தின் கீழ் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை நேரில் ஆய்வு செய்த அவர், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் அற்ற சூழலால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாவதாகக் குற்றம் சாட்டினார்.
பல பள்ளிகளில் முறையான வகுப்பறைகள், இருக்கைகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான சாலைகள் கூட இல்லை என்று சுட்டிக்காட்டிய திப்கே, அரசும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றார். சில இடங்களில் மாணவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுவதாகக் கூறிய அவர், கல்வித் துறையின் அவலத்தைப் புரிந்துகொள்ள அமைச்சர்களும் அதிகாரிகளும் தங்களது சொந்தக் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியல் தலைவர்கள் வாக்கு கேட்க வரும்போது சாதி, மதங்களைத் தாண்டி பள்ளிகளின் மேம்பாடு குறித்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மதம் எப்போதும் ஆபத்தில் இல்லை என்றும், ஆனால் குழந்தைகளின் எதிர்காலமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பள்ளிகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் பாம்புக்கடி போன்ற ஆபத்துகளுக்கு மாணவர்கள் ஆளாவதாகவும், போதுமான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதுமட்டுமன்றி, லாத்தூர் நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிபிஐ நடத்தி வரும் விசாரணையின் திசை குறித்தும் திப்கே கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் கீழ்மட்ட சந்தேக நபர்களை மட்டுமே கைது செய்துவிட்டு, பின்னணியில் இருக்கும் பெரும் புள்ளிகளையும் மூத்த அதிகாரிகளையும் பாதுகாக்க முயற்சிகள் நடப்பதாக அவர் பரபரப்புக் குற்றச்சாட்ட முன்வைத்தார்.
வரும் 2029-ஆம் ஆண்டிற்குள் ‘ஜென் Z’ தலைமுறை இளைஞர்கள் ஒரு வலுவான தேர்தல் சக்தியாக உருவெடுப்பார்கள் என்று குறிப்பிட்ட அவர், அரசுப் பள்ளிகளை உடனடியாக சீரமைக்காவிட்டால் கிராமங்கள் தோறும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும், இளம் வாக்காளர்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கச் செய்வார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
