ஹைதராபாத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் பணி நியமன அறிவிப்பு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்பில், பணியாளர்கள் தங்களின் ஷிப்ட் நேரத்தில் சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து நிற்க வேண்டும் அல்லது நடக்க வேண்டும் என்றும், 22 கிலோ எடையைத் தூக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடினமான நிபந்தனைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த பலரும், அமேசான் நிறுவனம் இந்திய ஊழியர்களை எப்படிக் கருதுகிறது என்று காட்டமாக விமர்சித்து வருகின்றனர். மேலாளர் நிலையிலான பணிக்குக் கூட இத்தகைய உடல் உழைப்புத் தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் கலவையான கருத்துகளே நிலவுகின்றன. சிலர் இது போன்ற கடினமான சூழல் அனைத்து நாடுகளிலும் உள்ள கிடங்கு மற்றும் தளவாடப் பணிகளில் பொதுவானதுதான் என்று வாதிடுகின்றனர். சில்லறை வணிகம், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளிலும் ஊழியர்கள் நாள் முழுவதும் நின்றே பணியாற்றும் சூழல் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையில், தங்கள் ஊழியர்களின் நலனைக் காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமேசான் நிறுவனம் பதிலளித்துள்ளது. கடினமான வானிலை காலங்களில் இடைவேளைகளை வழங்குதல் மற்றும் ஓய்வு அறைகளை அமைத்தல் போன்ற வசதிகளைச் செய்து தருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
