அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் போர் தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) பொதுவெளியில் தோன்றாமல் முற்றிலும் தலைமறைவாகியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட தனது தந்தை அயதுல்லா அலி கமேனியின் கதி நமக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, மொஜ்தபா கமேனி தற்காப்பு நடவடிக்கையாக ஒரு ரகசிய பதுங்கு குழியில் தீவிர பாதுகாப்புடன் ஒளிந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடக்கும் அணுசக்தி பேச்சுவார்த்தைக்கான பதில்கள் வந்து சேர பல வாரங்கள் தாமதமாவதாகக் கூறப்படுகிறது. அல்-கொய்தா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன், அமெரிக்காவுக்குப் பயந்து பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் டிஜிட்டல் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் வெறும் ரகசிய தூதர்கள் (Couriers) மூலம் மட்டுமே கடிதங்களை அனுப்பி 10 ஆண்டுகள் தப்பியிருந்த அதே பாணியை தற்போது ஈரானின் புதிய தலைவரும் கையில் எடுத்துள்ளார்.
ஈரான் அரசாங்கத்தின் மிக முக்கிய அதிகாரிகளுக்குக் கூட மொஜ்தபா கமேனி எங்கு இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு, பல கட்ட ரகசிய தூதர்கள் மூலமாகவே அவரது உத்தரவுகள் கைமாறி வருகின்றன. “அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பேசக் கூட பயந்து பதுங்கு குழிகளில் முடங்கியிருப்பது ஒரு காமெடி சீரியல் போல இருக்கிறது” என அமெரிக்க அதிகாரிகள் கிண்டலடித்துள்ளனர். இதற்கிடையே, ஈரானிடமிருந்து இறுதிப் பதில் இன்னும் சில நாட்களில் வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது உலக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
