கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசின் செயல்பாடு குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

அவர் பேசுகையில், “அனல்மின் நிலையத் திட்டத்தை வெறும் அறிவிப்பாகத்தான் வெளியிட்டுள்ளனர், அது உடனே செயல்பாட்டிற்கு வரப் போவதில்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை இரண்டு அறிவிப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன; அதில் ஒன்றான மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் என்பது ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதான். முறையான திட்டமில்லாத செயல்பாடுதான் இந்த ஆட்சியினுடையது” என்றார்.

மேலும், தவெக கட்சி நிதி தொடர்பான சர்ச்சைக்குப் பதிலளித்த அவர், “கட்சி நிதி உண்மையா, பொய்யா என்பதை தவெகவிடம்தான் கேட்க வேண்டும். எதையாவது சொல்லிக் காலத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார்கள். ஊழல் என்று கூறினால் அதற்கான ஆதாரத்தைக் காட்டி நிரூபிக்க வேண்டும். ஆனால், தற்போது ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான் என்று மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்திப் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். அப்படி இருக்கையில், ஊழல் நடந்துகொண்டுதானே இருக்கிறது? இதை எப்படி தூய்மையான ஆட்சி என்று கூற முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் விளம்பரங்கள் குறித்துப் பேசிய அவர், “இந்த ஆட்சியில் எங்காவது சோதனை நடந்தால் உடனே ரீல்ஸ் போடுகிறார்கள், ஊடகங்களும் அதற்கு மெருகூட்டுகின்றன. ரீல்ஸ் வீடியோக்களைப் போட்டே வண்டியை ஓட்டுகிறார்களே தவிர, அங்கே ரியல் (உண்மை) எதுவும் இல்லை. அமெரிக்க நாட்டிற்குக்கூட அவர் ஜனாதிபதி ஆகலாம், தவறில்லை; டொனால்ட் ட்ரம்புக்குப் பதில் அவரே அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும் ஆகலாம், அது அவருடைய விருப்பம்! ஆனால், இங்கே வேண்டுமானால் ரீல் விடலாம், அமெரிக்காவில் அதெல்லாம் நடக்காது” என்று நக்கல் அடித்தார்.

கூட்டணி நிலைப்பாடு மற்றும் அரசின் எதிர்காலம் குறித்துப் பேசுகையில், “நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம். தவெக ஆட்சி செல்லும் போக்கைப் பார்த்தாலே இந்த அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்பது நன்றாகத் தெரிகிறது. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். இவ்வளவு போராட்டங்கள் நடகின்றன, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்தது? இவர்களிடம் எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டமும் கையில் இல்லை; கடன் மட்டுமே வாங்குவதைத் தவிர வருவாய்க்கு வேறு எந்த வழியையும் காணோம்” என்றார்.