ரஷிய கச்சா எண்ணெய் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதாக அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ள நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காகச் செலுத்தப்படும் ஒவ்வொரு டாலரும் நேரடியாக உக்ரைன் மீதான போருக்கே பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இத்தகைய தடை தளர்வுகள் போர்க்களத்தில் நிலவும் உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்றும், இது போரைத் தொடர்ந்து நடத்தலாம் என்ற தவறான எண்ணத்தை ரஷியத் தலைமைக்கு ஏற்படுத்தும் என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரஷியா 2,360-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜெலென்ஸ்கி, தற்போது கடலில் சுமார் 110-க்கும் மேற்பட்ட ரஷிய எண்ணெய்க் கப்பல்கள் தடையின்றி உலா வருவதாகக் கூறியுள்ளார்.

இதனால் 12 மில்லியன் டன் கச்சா எண்ணெயின் மதிப்பு சுமார் 10 பில்லியன் டாலர்கள் என்றும், இந்தத் தொகை மீண்டும் உக்ரைனுக்கு எதிரான புதிய தாக்குதல்களாக மாற்றப்படும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். எனவே, ரஷிய எண்ணெய்க் கப்பல்கள் துறைமுகங்களுக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தி, ஆக்கிரமிப்பு நாட்டின் எண்ணெய் வருவாயைக் குறைக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.