அரியானா மாநிலம் கைத்தல் பகுதியில் நடந்த ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. அதாவது ஒரு 13 வயது சிறுமியும், அவரது பாட்டியும் இணைந்து விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற கொடூரச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அரங்கேறியுள்ளது. இதில், தீவிர சிகிச்சைப் பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்; பாட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலைக்கு முன்பு அந்தச் சிறுமி தனது தந்தைக்கு எழுதிய ஒரு பக்க கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது. அதில், “அப்பா… அபிஷேக்கும் அம்மாவும் கள்ளத்தொடர்பில் இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறோம், ஆனால் தயவுசெய்து அபிஷேக்குக்குத் தண்டனை கொடுங்கள்” என்று சிறுமி தனது தந்தையிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டில் திருமணம் நடந்து, ஒரு மகனும் 13 வயதான இந்தச் சிறுமியும் உள்ளனர். சிறுமி  அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தந்தை வெளியில் வேலைக்குச் செல்லும் நேரத்தைப் பயன்படுத்தி, அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் இவரது வீட்டிற்குத் தொடர்ந்து வந்து சென்றுள்ளார்.

தாய்க்கும் அபிஷேக்கிற்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு அந்தச் சிறுமிக்குத் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும், யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவோம் என்று சிறுமியைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி தந்தை வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது, அங்கு அபிஷேக் இருப்பதைக் கண்டு வாக்குவாதம் முற்றி மனைவியைத் தாக்கியுள்ளார். அத்தோடு நில்லாமல், அன்றைய தினமே மனைவியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதற்கிடையில், தொடர்ந்து வந்த மிரட்டல்களால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமியும் அவரது பாட்டியும் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி பிற்பகலில் ஒரு  பூங்காவிற்குச் சென்று விஷம் அருந்தியுள்ளனர்.

அங்கு சென்ற பொதுமக்களால் மீட்கப்பட்டு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கர்நால் கல்பனா சாவ்லா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 23-ஆம் தேதி உயிரிழந்தார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அபிஷேக் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.