ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரன் அவுட் கண்டத்தில் இருந்து தப்பிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, எதிரணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ‘தம்ஸ் அப்’ காட்டி நன்றி தெரிவித்த சுவாரசியமான சம்பவம் மைதானத்தில் அரங்கேறியுள்ளது.
தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தின் 5-ஆவது ஓவரில், விராட் கோலி ரன் எடுக்க முயன்றபோது இந்த பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கவர் திசையில் பந்தைத் தடுத்து நிறுத்திய குஜராத் அணியின் வாஷிங்டன் சுந்தர், உடனே ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். ஆனால் பந்து துரதிர்ஷ்டவசமாக ஸ்டம்பில் படாமல் தவறினது.
Virat Kohli thanking Washington Sundar for the overthrows. 😂
Virat Kohli Funny Mood Against GT ❤️😍 pic.twitter.com/Y5r3axkKfP
— Kuldeep (@Kuldeep2250) May 26, 2026
அடுத்த சில நொடிகளில் குஜராத் அணிக்கு மேலும் ஒரு ஏமாற்றமாக, ஓவர்த்ரோ செய்யப்பட்ட அந்த பந்து நேராக எல்லைக்கோட்டைத் தாண்டி பவுண்டரிக்குச் சென்றது. இதனால் விக்கெட் விழ வேண்டிய இடத்தில், ஆர்சிபி அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் பரிசாகக் கிடைத்தன. இந்த இக்கட்டான சூழலில் இருந்து நூலிழையில் பிழைத்த விராட் கோலி பெரும் நிம்மதியடைந்தார்.
பின்னர், தனது வழக்கமான குறும்புத்தனமான பாணியில் வாஷிங்டன் சுந்தரை நோக்கித் திரும்பி, ‘தம்ஸ் அப்’ சைகை காட்டி சிரித்தபடி நன்றி தெரிவித்தார். இந்த சுவாரசியமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு ட்ரெண்டாகி வருகின்றன.
