
இந்திய ரயில்வே துறையில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது விமானங்களில் இருப்பது போலவே, பிடித்த இருக்கையை ரயில்களில் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த முயற்சி, பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
`பயணிகள் முன்பதிவுப் பகுதி (Passenger Reservation System – PRS) தற்போது முழுமையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய முறையில், பயணிகள் விமானங்களில் உள்ள வசதியைப் போல, தாங்கள் விரும்பும் இருக்கையை தேர்வு செய்ய முடியும். இந்த வசதி இந்த ஆண்டு டிசம்பரில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கான சலுகைகளும் ஒருங்கிணைக்கப்படும்.
இப்போது வரை, ரயில்களில் பயணச்சார்ட் நான்கு மணி நேரத்திற்கு முன் தயாராகும். இதனால், கடைசி நேரத்தில் பயணிகளை உறுதி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க, இனிமேல் 8 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் தயார் செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இது தொலைதூரப் பயணிகளை முன்னோக்கி திட்டமிட உதவும்.
ஜூலை 1 முதல், தட்கல் டிக்கெட்டுகளை IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், ஆதார் அங்கீகாரம் பெற்றிருந்தாலே மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இது, ஒரு சில ஏஜெண்டுகள் ஒரே நேரத்தில் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே தகவல் அமைப்புக்கான மையமான CRIS, நவீன PRS அமைப்பை உருவாக்கி வருகிறது. இது நிமிடத்திற்கு 1.5 லட்சம் முன்பதிவுகள் மற்றும் 40 லட்சம் கேள்விகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இது பல்வேறு மொழிகளில் பயணிகளுக்கு நிகரற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
இந்த புதிய நடவடிக்கைகள் அனைத்தும், இந்திய ரயில்வேயை பயணிகளுக்குத் தேவையான வசதிகளுடன் நவீன முறையில் மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.