
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா துரோகி என்று விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஏக்நாத் ஷிண்டே ஒரு காலத்தில் ஆட்டோ ஓட்டியவர் என்பதைக் கூறி, குணால் கம்ரா அவமானப்படுத்தும் வகையில் பேசினார். இது சமூக வலைதளங்களில் பரவியதும், கம்ராவுக்கு எதிராக பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து அவரது நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டுடியோவை சிவசேனா ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.
இந்த விவகாரத்தில் தற்போது நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் குரலெழுப்பியுள்ளார். குணால் கம்ராவை கடுமையாக கண்டித்த கங்கனா, அவர் மீது எடுக்கப்பட்ட காவல் நடவடிக்கைகள் சரியானவையெனவும், இது போன்ற கருத்துக்கள் சட்டத்திற்கு எதிரானவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். “நீங்கள் யாராக இருந்தாலும், நகைச்சுவை என்ற பெயரில் ஒருவர் மீது இழிவான வார்த்தைகளை பயன்படுத்துவது தவறு” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், “ஏக்நாத் ஷிண்டே ஒரு காலத்தில் ஆட்டோ ஓட்டியவராக இருந்தாலும், இன்று அவர்கள் ஒரு மாநிலத்தின் துணை முதல்வராக உயர்ந்திருக்கின்றனர். இது ஒரு சாதனை. அதைப் பொருட்படுத்தாமல், அவரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது கொடுமை. குணால் கம்ரா வாழ்க்கையில் எதையும் சாதிக்காதவர். சில நிமிடங்களுக்கான புகழ் நாடி இவ்வாறான நகைச்சுவையைப் பெயருக்கு மட்டும் செய்து துஷ்பிரயோகம் செய்கிறார்” என்று கங்கனா கூறியுள்ளார்.
மேலும் மும்பையில் நடிகை கங்கனாவின் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்த போது அதனை நடிகர் குணால் விமர்சித்திருந்த நிலையில் அதனை தற்போது குறிப்பிட்டு இதுதான் கர்மா என்று கங்கனா கடுமையாக சாடியுள்ளார். அவருடைய ஸ்டூடியோ சர்ச்சைக்கு பிறகு இடித்து தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.