வங்கதேச கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய இளம் வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்பட்ட காஜி ஒனிக் (27), போதிய வாய்ப்புகள் இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்காக விளையாடியவர் காஜி ஒனிக். அந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சுப்மன் கில், அபிஷேக் சர்மா போன்றோருக்கு எதிராகத் தனது வேகத்தால் சவால் விடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், வங்கதேச கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டார்.
ஒனிக்கின் சீரான வளர்ச்சியில் பெரும் தடையாக அமைந்தது ஊக்கமருந்து விவகாரம். கடந்த 2020-ஆம் ஆண்டு தேசிய கிரிக்கெட் லீக் போட்டியின் போது நடைபெற்ற பரிசோதனையில், அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தடைக்காலம் முடிந்து மீண்டும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினாலும், அவருக்குத் தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தேசிய அணியில் நுழையும் கனவு சிதைந்தது. ஒருபுறம் போதிய வாய்ப்புகள் இல்லாமை, மறுபுறம் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் மனமுடைந்த ஒனிக், தனது 27 வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
View this post on Instagram
காஜி ஒனிக் தனது குறுகிய கால திரைப் பயணத்தில் 12 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளையும், 50 ‘லிஸ்ட் ஏ’ போட்டிகளில் 66 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவர் தனது கடைசிப் போட்டியை 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விளையாடினார்.
இளம் திறமைகளை முறையாகப் பராமரிக்கத் தவறினால், இது போன்ற வீரர்கள் பாதியிலேயே காணாமல் போக நேரிடும் என்பதற்கு ஒனிக்கின் ஓய்வு ஒரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
