பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் முகமது நவாஸ், போதைப்பொருள் தடுப்புச் சோதனையில் (Drug Test) சிக்கியிருப்பதாக எழுந்துள்ள தகவல் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அவர் மீது அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த சர்ச்சை ஓய்ந்து விசாரணை முடியும் வரை, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘டி20 பிளாஸ்ட்’ தொடரில் விளையாடுவதற்காக அவருக்கு வழங்கப்படவிருந்த ‘தடையில்லாச் சான்றிதழை’ (NOC) பிசிபி தற்போது நிறுத்தி வைத்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடி வரும் நவாஸ், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படாமல் தடுமாறி வருகிறார்.
இந்தச் சூழலில், டிரக் டெஸ்ட் சர்ச்சையும் சேர்ந்துள்ளதால் அவரது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை நவாஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர் நீண்ட காலத் தடையைச் சந்திக்க நேரிடும். இது வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் அவர் பங்கேற்கும் வாய்ப்பையும் முழுமையாகப் பறித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
