அழுத்தத்திற்குப் பயப்பட மாட்டேன் என்று வீரவசனம் பேசும் நடிகர் விஜய், ஒரு காலத்தில் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படிக் கைகட்டி நின்றார் என்பதை மக்கள் மறக்கவில்லை” என்று அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “நமது அரசியல் பயணத்தில் பல தடைகள் வரலாம். அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான்? இந்த முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரிகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் ‘ஜனநாயகம்’ படத்திற்கான தணிக்கை விவகாரம் மற்றும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை நெருக்கடிகள் குறித்துப் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, விஜய்யின் இந்தப் பேச்சு குறித்துக் கூறியதாவது:
“இப்போது புதிதாகக் கட்சி ஆரம்பித்துள்ள ஒரு நடிகர், அழுத்தத்திற்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன் என்று வீரவசனம் பேசியிருக்கிறார். தனது சினிமா படம் வெளியாகாமல் முடங்கியபோது, அவரும் அவரது தந்தையும் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்று, ‘நாங்கள் உங்களுக்கு என்றும் எதிரி இல்லை’ என்று மன்றாடியதை இந்த நாடு அறியும். அன்று அழுத்தத்திற்குப் பயந்து கைகட்டி நின்றவர் தான் இன்று பெரிய வீரர் போலப் பேசிக் கொண்டிருக்கிறார்.”
மேலும் திமுகவை ‘தீய சக்தி’ என்றும், அதிமுகவை ‘ஊழல் அடிமை சக்தி’ என்றும் விஜய் விமர்சித்த நிலையில், திமுக அமைச்சர்கள் தற்போது விஜய்யின் கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்து வருகின்றனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
