குமரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், தான் பயின்ற அதே பள்ளியில் இன்று தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள சம்பவம், அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. பேணு மலை கிராமத்தைச் சேர்ந்த ஷீலா என்ற பெண், மிகவும் கடினமான சூழ்நிலையில் கல்வி பயின்றவர்.
தனது பள்ளி நாள்களில் மின்சாரம் இல்லாத வீட்டில், மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பாடம் படித்து வளர்ந்தவர். அப்போது, பல கிலோமீட்டர் தூரத்தை நடந்து சென்று பத்துகாணி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வியை முடித்திருந்தார்.
பள்ளி படிப்பை முடித்தபின், ஆசிரியர் பணிக்கான ஆவலுடன் உழைத்த ஷீலா, ஈரோடு மாவட்டத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றியதையடுத்து சொந்த ஊருக்கு பணியிட மாறுதல் பெற்று வந்தார். பின்னர், வட்டப்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
தற்போதைய நிலைமைக்கேற்ப, அவர் தலைமைக் கல்வி பொறுப்புக்குள் நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும், தான் படித்த அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டது, அவரது வாழ்க்கையில் அரிய வரம் என ஷீலா கூறுகிறார்.
தான் பெற்ற அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஷீலா கூறுகையில், “நான் பிறந்த பேணு என்ற மலை கிராமத்தில் மின்சாரம், போக்குவரத்து வசதி எதுவும் இல்லாத சூழ்நிலையில் வளர்ந்தேன். கல்விக்காக நான் நடந்துபோய்ப் படித்தேன்.
வீட்டிற்கு வந்த பிறகு மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்தேன். அப்போது கம்ப்யூட்டர் என்றால் என்னவென்று தெரியாத நிலை. ஆனால் இன்று மாணவர்களுக்கு எல்லா வசதிகளும் உள்ளன. நான் இப்போது அந்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக இருக்கிறேன் என்பது என் வாழ்வில் கிடைத்த அரிய பரிசு.
இது போல் வாய்ப்பு மிகக் குறைவாக தான் கிடைக்கும்” எனக் கூறி, மகிழ்ச்சியடைந்தார். இந்த சாதனையை வியப்புடன் கொண்டாடும் பொதுமக்கள், கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி என்பதை மீண்டும் நிரூபித்ததாக பாராட்டுகின்றனர்.
