எல்லைப் பாதுகாப்பில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்கள் வெறும் ‘பித்தலாட்டம்’ என்றும் இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் கட்டியார் தெரிவித்துள்ளார். பதான்கோட் ராணுவ முகாமில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) போர் ஒத்திகை மற்றும் ஆயுதக் கண்காட்சியின் போது அவர் இவ்வாறு பேசினார்.

பாகிஸ்தான் அவ்வப்போது விடுக்கும் அணு ஆயுத மிரட்டல் குறித்துப் பேசிய மனோஜ் கட்டியார், “இந்த மிரட்டல்கள் அனைத்தும் இந்தியாவைத் தற்காப்பு நடவடிக்கைகளில் இருந்து தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அழுத்தம் மட்டுமே. இந்தியா இதுபோன்ற வெற்று மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சாது. ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது முதல் முறையை விட மிகவும் கடுமையானதாகவும், பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்” என்று எச்சரித்தார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இதற்குப் பதிலடி கொடுக்க முயன்ற பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்கள் மற்றும் ராணுவ நிலைகளை இந்தியா நிலைகுலையச் செய்தது. சுமார் 88 மணி நேரம் நீடித்த இந்த மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தானே போர் நிறுத்தத்திற்கு  கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்த லெப்டினன்ட் ஜெனரல், அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் பயங்கரவாதிகள் மீது ராணுவம் தொடர்ந்து இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிபடத்தெரிவித்தார்.