திமுக மாணவரணிச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட ராஜீவ் காந்தி, தன் மீது சுமத்தப்பட்ட பெண் விவகாரம் தொடர்பான புகார்களுக்கு முதல்முறையாக மிகவும் ஆவேசமாக விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் அவர் ஒரு பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் தவறாகப் பேசியது போல பரவும் ஸ்கிரீன்ஷாட்கள் முற்றிலும் போலியானவை என அவர் மறுத்துள்ளார். “யாருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வந்து என்னை நேரடியாகக் கொலை கூட செய்யுங்கள். ஆனால், இப்படிப் பொய்யான குற்றச்சாட்டுகளை வீசி ஒருவரை வீழ்த்த நினைப்பது அதைவிடக் கொடூரமானது” என அவர் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஸ்கிரீன்ஷாட்கள் எப்படி ஒரு இணையதளம் மூலம் போலியாக உருவாக்கப்படுகின்றன என்பதையும் அவர் ஆதாரத்தோடு விளக்கியுள்ளார். ‘Fake Instagram Chat Generator’ போன்ற தளங்களைப் பயன்படுத்தி தன் மீது திட்டமிட்டு களங்கம் விளைவிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் பெரிதாக்க முயலும் நிலையில், ராஜீவ் காந்தியின் இந்த ‘ஆவேச விளக்கம்’ திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
