காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதோடு சிந்து நதிநீரையும் நிறுத்திவிட்டது. இதனால் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பாகிஸ்தானும் நிறுத்தியதோடு எல்லையில் ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவமும் எல்லையில் வீரர்களை குவித்து வைத்துள்ள நிலையில் பிரதமர் மோடி முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் வழங்கியுள்ளார்.

அதாவது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் பதிலடியாக முப்படைகள் தாக்குதல் நடத்துவது பற்றி அவர்களே முடிவு செய்யலாம். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் அத்துமீறி துப்பாக்கி சூடுசம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் போர் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் பாகிஸ்தான் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளது.