சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் சாலை விபத்தில் அகால மரணமடைந்த தனது மகனை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உயிர்ப்பித்து அவரது 80 வயது தாயை ஒரு குடும்பம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மகனின் பிரிவைத் தாங்க முடியாத அவரது 80 வயது தாய்க்கு இதய நோய் இருந்ததால், மரணச் செய்தியைச் சொன்னால் அவர் உயிரிழந்து விடுவார் என்று அஞ்சிய குடும்பத்தினர், ஒரு நூதன முயற்சியைக் கையாண்டனர்.

அதன்படி, ஏஐ நிபுணர்களின் உதவியுடன் அந்த மகனின் பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல் மாதிரிகளைச் சேகரித்து, அவரைப் போலவே பேசும் மற்றும் அசையும் ஒரு ‘டிஜிட்டல் அவதாரத்தை’ உருவாக்கினர்.

இன்று அந்தத் தாய்க்குத் தன் மகன் இறந்தது தெரியாது; தினமும் செல்போனில் வீடியோ கால் மூலம் தோன்றும் அந்த டிஜிட்டல் மகன், “அம்மா சாப்பிட்டீங்களா?”, “உடம்பு எப்படி இருக்கு?” என்று அதே பாசத்துடன் அதே குரலில் பேசுகிறான். நிஜ மனிதனைப் போலவே கண்ணடிக்கவும், சிரிக்கவும் செய்யும் இந்த ஏஐ தொழில்நுட்பம் அந்தத் தாய்க்குத் தன் மகன் எங்கோ தூரத்தில் வேலை செய்கிறான் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

இது ஒருபுறம் உணர்ச்சிகரமான ஆறுதலாக இருந்தாலும், ஒருவரது மரணத்தை மறைத்து இப்படி டிஜிட்டல் முறையில் ஏமாற்றுவது சரியா என்ற விவாதத்தையும் உலகளவில் கிளப்பியுள்ளது. இருப்பினும், அந்தத் தாயின் முகத்தில் இருக்கும் நிம்மதியை விட வேறு எதுவும் பெரியதல்ல என்று அந்தக் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.