இங்கிலாந்தைச் சேர்ந்த தொழில்முறை ஸ்கைடைவர் விக்டோரியா, தனது வாழ்க்கையில் 2600 முறை குதித்து சாதனை படைத்தவர். ஆனால் 2015-ஆம் ஆண்டில் நடந்த ஒரு தாவல், அவரது வாழ்வின் மிகப்பெரிய திருப்பமாக மாறியது. 4000 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் போது, அவர் பயன்படுத்திய முக்கிய மற்றும் ரிசர்வ் பாராசூட்கள் இரண்டும் செயலிழந்தன. இவ்விபத்தில் அவரது முதுகெலும்பு, இடுப்பு மற்றும் விலா எலும்புகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

முதலில் இது ஒரு விபத்தே என நம்பிய விக்டோரியா, பின்னர் உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அவரது கணவர் எமில் சிலியர்ஸ் திட்டமிட்டே பாராசூட்டின் முக்கியமான பாகங்களை அகற்றி, தன்னை கொல்ல முயன்றிருந்தார் என்பது தெரியவந்தது. “அது விபத்து அல்ல; என் கணவர் செய்த கொடூரமான சதி!” என விக்டோரியா சாடினார். விபத்துக்கு முந்தைய நாள், எமில் ‘குழந்தைக்கு’ பாராசூட் தேவை என கூறி, அதை குளியலறைக்கு கொண்டு சென்று சேதப்படுத்தியிருந்தார்.

இந்த முயற்சிக்குப் பின்னால் எமிலின் பல பெண்களுடன் தொடர்பு, விபச்சார செலவுகள், கடன் சிக்கல்கள் என பல காரணங்கள் இருந்தன. இந்த விவகாரம் நீதிமன்றம் சென்ற நிலையில், முதல் விசாரணையில் தீர்ப்பு வரவில்லை. ஆனால் இரண்டாவது விசாரணையில் எமில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் விக்டோரியா வாழ்க்கையை மீண்டும் தொடங்கி, அதே கிளப்பில் சந்தித்த சைமன் குட்மேனுடன் திருமணம் செய்துகொண்டார்.

இந்த அதிசயமான மரணதவிர்ப்பு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “மரணத்திற்கு நேரில் சென்றவரையும் அதிர்ஷ்டம் மீட்டெடுக்க முடியும்” என்ற நம்பிக்கையை இந்த சம்பவம் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.