
சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் ஆனந்தராஜ்(36) என்பவர் போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஆனந்தராஜ் ஸ்பென்சர் பிளாசா பகுதியில் பணியில் இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மாநகரப் பேருந்துக்கு வழி விடாமல் இருந்தார். இதனைப் பார்த்து ஆனந்தராஜ் பேருந்துக்கு வழிவிடுமாறு கூறினார். ஆனால் பதிலுக்கு அந்த நபர் ஆனந்தராஜை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளார். சக போலீசார் அந்த நபரை பிடித்து அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் மயிலாப்பூரை சேர்ந்த சண்முகராஜ்(45) என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக அவர் சிகிச்சை பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போலீசார் பிடித்ததும் சண்முகராஜ் தனது ஆடைகளை கழற்றி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அட்ராசிட்டி செய்துள்ளார். மேலும் சாலையில் படுத்து பிரச்சனை ஏற்படுத்தினார். அந்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.