மத்தியப் பிரதேசம், இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அதிர்ச்சியூட்டும் மருத்துவ சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒரு பெண், ஜூலை 22-ஆம் தேதி இரவு பிரசவ வலியால் அவசரமாக சேர்க்கப்பட்ட நிலையில், சிசேரியன் முறையில் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஆனால், அந்தக் குழந்தைக்கு ஒரே உடலில் இரண்டு தலைகள் இருப்பது தெரிந்ததும் மருத்துவர்கள், தாயார் மற்றும் உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
இந்த வகை பிறவி மருத்துவ ரீதியாக “ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்” (Conjoined Twins) எனப்படும். குழந்தையின் எடை 2.8 கிலோவாக இருந்தாலும், உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு இதயங்கள் உள்ளபோதும், அதில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. மேலும், சுவாசத்தில் சிக்கல் உள்ளிட்ட பல உடல்நலக் குறைகள் காரணமாக, குழந்தை தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெற்றோர் கடும் உளவியல் அதிர்ச்சியில் இருப்பதால், அவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் நம்பிக்கை அளிக்கும் உளவியல் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனை தரப்பில் கூறியதாவது, இந்த குழந்தையின் பாகங்களை அறுவைசிகிச்சை மூலம் பிரிப்பது சாத்தியமில்லை என்பதுடன், உறுப்புகள் ஒருவருக்கொருவர் தீவிரமாக இணைந்திருப்பதால் மருத்துவ ரீதியாக மிகச் சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தனர். தாயின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
