அ.தி.மு.க.வில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் ஆதரவாளர்கள் மற்றும் த.வெ.க.வினரிடையே உற்சாக வரவேற்புடன் உரையாற்றினார்.
அப்போது அவர், “நான் பார்த்த முதல் தலைவர் எம்.ஜி.ஆர்., இரண்டாவது தலைவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளே தொடர்ந்து ஆள வேண்டுமா, அல்லது புதிய தலைமுறையினர் ஆள வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய். விஜய் முதலமைச்சராக ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்று உறுதியாகக் கூறினார். அ.தி.மு.க.வின் இன்றைய நிலையைச் சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், விஜய் அனைவரையும் அரவணைப்பவர் என்றும், தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியது போல, விஜய்க்கும் வழிகாட்டியாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், “காலங்கள் கனிந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் நம்முடைய கூட்டணி பலமாக மாறும். நம்முடன் இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தலாவது வெற்றி பெற்றிருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
