அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களை  இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது. சற்று முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையின் தீர்ப்பு இன்று வெளிவருவதால் அதிமுக சட்ட போராட்டம் இன்றோடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு என்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளர் பதவி 2026-ம் ஆண்டு வரை நீடிக்கிறது. ஆனால் எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்காமல் எந்த விளக்கமும் கேட்காமல் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.

அதிமுகவில் கடந்த 1977-ம் ஆண்டு முதல் ஓ. பன்னீர்செல்வம்  இருக்கிறார். அவர் முதல்வராக, பொருளாளராக, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் கட்சியை உருவாக்கிய எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிரானவை. யாருமே போட்டியிடாத வகையில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுச் செயலாளரை அடிப்படை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதை பொதுக்குழு உறுப்பினர்களால் மாற்ற முடியாது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அத்துமீறி நடந்திருக்கிறார் என வழக்கறிஞர் வாதிட்டார். இதைத்தொடர்ந்து இபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வாதிட இருக்கிறது.