
அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டு தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் இந்த வாரமே தீர்ப்பு சொல்ல விரும்புகிறோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் சசிகலா தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வருகிற 9-ம் தேதி சசிகலா செங்கல்பட்டு உட்பட சில முக்கிய பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இவர் தொண்டர்களை சந்தித்து தனக்கான ஆதரவுகளை திரட்ட இருக்கிறார்.
இவருக்கு அதிமுக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருகிற 9-ம் தேதி சசிகலா கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் வண்டலூர் வழியாக கௌப்பாக்கம் செல்கிறார். அங்கிருந்து மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு சென்று தொண்டர்களை சந்திக்கிறார். மேலும் அதிமுக வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம் என்று பரபரப்பு நிலவும் நிலையில், சசிகலா தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளில் அதிரடியாக இறங்கியது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.