தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில் அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அனைத்து கட்சியினரும் பல விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் அதிமுக சொத்து பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என அண்ணாமலை நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக சொத்து பட்டியலை வெளியிடட்டும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், அதிமுக சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும். அதற்கெல்லாம் பயப்பட கூடிய ஆட்கள் நாங்கள் இல்லை. மறைமுகமாக மிரட்டும் வேலை எல்லாம் எங்களிடம் நடக்காது. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை, நாங்கள் தயாராக இருக்கிறோம் என பதில் அளித்துள்ளார்.