முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்றது. சீமான், ஸ்டாலின் சகோதரர் மு.க. முத்து அவர்களின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நான் கடந்த காலத்தில் பசியால் மயக்கமடைந்தபோது, என்னைத் தொடர்பு கொண்டு உடல்நிலை பற்றி விசாரித்த முதல்வர் ஸ்டாலினின் மனித நேயத்தை மறக்கமுடியாது. எப்படி இருந்தாலும் ஒரு சகோதரர் இழப்பு என்பது பெருந்துயரம்தான்,” என குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய “அதிமுகவிற்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் ஆதரவு தருவீர்களா?” என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் தவிர்த்தார். “இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ளன. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ராணுவத்துக்கு ரகசியம் உள்ளதைப்போல் அரசியலுக்கும் ரகசியம் இருக்கிறது,” என கூறினார். அவரது இந்த பதில், எதிர்கால அரசியல் நகர்வுகளை பற்றிய பல்வேறு எண்ணங்களை எழுப்பி இருக்கிறது.
