2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலில் பாஜக சார்பில் 20 முதல் 30 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைவார்கள் என்றும், அவர்களில் சிலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பார்கள் என்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்” எனத் தொடர்ந்து கூறி வரும் நிலையில், கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் இந்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து வரும் நிலையில், இப்போது அதிமுக கூட்டணியிலும் அதே போன்ற கோரிக்கையை பாஜக எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
