அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் காலத்திலிருந்தே கட்சியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 300 பேர் நேற்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவிலிருந்து நேற்று விலகினர்.

அதே நேரத்தில் தேனி மாவட்டத்திற்கு பிரச்சார கூட்டத்திற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்தை முற்றுகையிட்டு பெண்கள் மற்றும் தொண்டர்கள் மீண்டும் அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி வட்டாரத்தில் அழுத்தத்தை கொடுப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது புரட்சித்தலைவி அம்மாவின் நூற்றாண்டு கால கழக வெற்றி கனவை நனவாக்க நினைக்கும் கழக முன்னோடி மாண்புமிகு செங்கோட்டையன் முயற்சிக்கு அதிமுக தொண்டர்கள் சார்பில் நன்றி என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.