அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நேற்று  பதில் மனு தாக்கல் செய்தது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் அதிகாரி முடிவு செய்வார்.

இரட்டை இலை சின்னத்துக்கான படிவத்தில் அதிமுகவில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மட்டுமே கையெழுத்திட முடியும். ஒரு கட்சியின் உட்கட்சி தேர்தலை கண்காணிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. மேலும் பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்காததால் அதிமுகவில் இரட்டை தலைமையே இன்னும் தொடர்கிறது என்று தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பு என்னிடம் வந்து கேட்டால் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு கண்டிப்பாக நான் கையெழுத்து போடுவேன் என்று அறிவித்துள்ளார். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு நான் காரணம் இல்லை எடப்பாடி தான் காரணம் என்பதை மறைமுகமாக ஓபிஎஸ் சொல்லிவிட்டார். ஆனால் எடப்பாடி தரப்பு கண்டிப்பாக ஓ. பன்னீர்செல்வத்திடம் சென்று இரட்டை இலை சின்னம் தொடர்பாக பேச மாட்டார்கள்.

அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனி தனியாக இரட்டை இலை சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு செல்லும் போது கண்டிப்பாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு விடும். ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் தனி சின்னத்தில் நின்று கணிசமான வாக்குகளையாவது பெற்றுவிடலாம் என்பது தான் எடப்பாடியின் கணக்கு என்று கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் தொண்டர்கள் தன்னை தவறாக நினைக்க மாட்டார்கள் என்று இபிஎஸ் நினைக்கிறாராம். மேலும் இன்று உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை நடைமுறை இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் 6 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை தாக்கல் செய்வதால் இன்னும் சில விஷயங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.