கிருஷ்ணகிரி எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கிருஷ்ணகிரி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டதோடு போலீசாருக்கும் காயங்கள் ஏற்பட்டது. இதனால் போலீசார் பொதுமக்களை தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் அப்புறப்படுத்தியதோடு 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எருது விடும் விழாவுக்கு அனுமதி கேட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடியாக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கலாச்சார விழாக்கள் ஒவ்வொன்றையும் தடை செய்வதே திமுக அரசின் நோக்கமாக இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக எருது விடும் விழாவுக்கு தடை செய்ய மாட்டோம் என்று கூறிய நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் தடை செய்து விட்டனர். மேலும் போராட்டம் நடத்தி தான் காலம் காலமாக நடைபெற்று வரும் விழாக்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்று பொது மக்களை தள்ளிவிடாமல் உடனடியாக எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என திமுக அரசை எச்சரிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.