தவெக மாநில நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, அதிமுக தொண்டர்களைத் தங்கள் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்த விவகாரம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு ஏற்கனவே காரசாரமாகப் பதிலடி கொடுத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தற்போது மேலும் ஆக்ரோஷமாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதிமுக என்பது சாதாரணமான கட்சி அல்ல என்றும், அது தொண்டர்களின் ரத்தத்தால் உருவான பேரியக்கம் என்றும் அவர் சாடியுள்ளார். ​இதுகுறித்து மேலும் பேசிய ஆர்.பி.உதயகுமார், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுக ஒரு சுயம்புவான இயக்கம். இந்த இயக்கத்தின் விசுவாசமிக்க தொண்டர்களை ஒருபோதும் யாராலும் விலை பேச முடியாது.

இதற்கு முன்னால் அதிகார மமதையில் அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் வரலாற்றில் தோற்றுப்போய், காணாமல் போயிருக்கிறார்கள். இப்போது மீண்டும் அதே வேலையில் தவெக அமைச்சர் ஈடுபட்டுள்ளதை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது” என மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார். தவெக-வுக்கு எதிராக அதிமுகவின் இந்த அடுத்தடுத்த அதிரடி தாக்குதல்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து வைரலாகி வருகின்றன.