கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. கணவனை இழந்த இவருக்கு அகில், அஜித் என இரண்டு மகன்கள் இருந்தனர். கட்டுமான தொழில் செய்து வரும் சகோதரர்களான இருவரும் மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது முன் விரோதத்தினால் தனது மகனை யாரேனும் அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என தாய் துளசி மற்றும் சகோதரன் அகில் கூறியுள்ளனர். இதனிடையே அக்கம் பக்கத்தினர் சகோதரர்கள் இருவருக்கும் இடையே முந்தைய தினம் தகராறு ஏற்பட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை மையமாக வைத்து காவல்துறையினர் துளசி மற்றும் அகிலை தனித்தனியாக விசாரித்தனர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதாவது துளசியும் அகிலும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சமயம் மதுபோதையில் வந்த அஜித் டிவியை உடைக்க முயற்சித்துள்ளார். அதை தடுக்க சென்ற துளசியை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதனால் கோபமடைந்த அகில் இரும்பு கம்பியால் தனது சகோதரன் அஜித்தை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த அஜித்தை பார்த்த துளசி அதிர்ச்சி அடைந்து தனது இளைய மகனையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பில் இருவரும் சேர்ந்து அஜித்தின் சடலத்தை தொலைவிலுள்ள ஒரு மரத்தில் கட்டி போட்டுவிட்டு விரோதத்தால் நடந்த கொலை போன்று நாடகம் ஆடி உள்ளனர். இந்த வாக்குமூலம் மூலத்தின் அடிப்படையில் இரு வரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.