நடப்பு ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பாதுகாப்பு வளைய (PMOA) விதிகளை மீறியதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்க ஓவர்களில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, கேமராக்கள் லக்னோ அணியின் பக்கம் திரும்பின. அப்போது அந்த அணியைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் நேரலையில் வெளியானது.
சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அந்த நபர் யார்? அணியில் அவருடைய பொறுப்பு என்ன? மற்றும் அவர் அமர்ந்திருந்தது வீரர்கள் தங்கும் அறையா (Dressing Room) அல்லது மைதானத்தில் உள்ள ‘டக் அவுட்’ (Dugout) பகுதியா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
ஐபிஎல் விதிகளின்படி, போட்டி நடைபெறும் நேரத்தில் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அணிகளின் மேலாளர் மட்டுமே செல்போனைப் பயன்படுத்த முடியும். ஆனால், அதையும் வீரர்கள் தங்கும் அறையில் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு; மைதானத்தில் உள்ள டக் அவுட்டில் பயன்படுத்த அனுமதியில்லை.
How is this LSG staff member allowed to use his phone during the match? pic.twitter.com/9eb8woCI1W
— Abhishek Kumar (@Abhishek060722) May 10, 2026
அவர் தனது மடிக்கணினியை (Laptop) ஆய்வுப் பணிகளுக்காகப் பயன்படுத்தலாம். இவர்கள் தங்களது போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களை மைதானத்திற்கு வந்தவுடனேயே அணைத்துவிட்டு (Switch Off), பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பிற ஊழியர்கள் யாரும் தகவல் தொடர்பு சாதனங்களை உள்ளே கொண்டு செல்லக் கூடாது.
2026 ஐபிஎல் தொடரில் இத்தகைய சர்ச்சை எழுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, குவஹாத்தியில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் டக் அவுட்டில் அமர்ந்து போன் பயன்படுத்தியதற்காக பிசிசிஐ அவருக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இது போன்ற விதிமீறல்கள் நடப்பதால், சில நாட்களுக்கு முன்புதான் பிசிசிஐ அனைத்து அணிகளுக்கும் 8 பக்கங்கள் கொண்ட புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. இந்த நிலையில் லக்னோ அணியின் இந்தச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ இது தொடர்பாக விசாரணை நடத்தினால், அந்த அணிக்கும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
