சில நேரங்களில் எதிர்பாராமல் எடுக்கும் சின்ன சின்ன முடிவுகள் கூட நம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதற்கு அமெரிக்காவின் நடந்த இந்தச் சம்பவமே சாட்சி. பெண் ஒருவர், தனது நாத்தனாருடன் சேர்ந்து அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அந்த நாத்தனார் நீண்ட காலமாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வரும் தீவிர ரசிகர் என்பதால், வழக்கம் போல அன்றும் டிக்கெட் வாங்கியுள்ளார்.
அப்போது அவர், தன் நாத்தனாரிடமும் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். லாட்டரியில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாத போதிலும், நாத்தனாரின் அன்பு கட்டாயத்திற்காக அந்தப் பெண் வெறும் 10 டாலர் (சுமார் ரூ. 800) கொடுத்து லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். பெட்ரோல் நிலையத்திலேயே வைத்து அந்த லாட்டரி சீட்டை சுரண்டிய அந்தப் பெண், அதில் இருந்த தொகையைப் பார்த்து ஒரு கணம் திகைத்துப் போனார். அதிர்ஷ்ட தேவதையின் பார்வையால் அவர் ஒரே நொடியில் 77,777 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 65 லட்சம் ரூபாய் மாபெரும் பரிசை வென்றிருந்தார்.
இந்தச் செய்தியைக் கேட்டு அந்தப் பெண்ணும் அவரது நாத்தனாரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க, பெட்ரோல் நிலையத்தில் இருந்த மற்றவர்களும் திரண்டு வந்து அவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறினர். இந்தச் சம்பவத்தின் ஹைலைட்டே அந்த நாத்தனாரின் ரியாக்ஷன் தான்.
“நான் பல வருஷமா லாட்டரி வாங்குறேன், எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கல; ஆனா ஆசை இல்லாத உனக்கு ஒரே நாள்ல இவ்வளவு பெரிய ஜாக்பாட் அடிச்சிருக்கு, விதி தப்பான ஆளைத் தேர்ந்தெடுத்துடுச்சு போல” என்று அவர் சிரித்துக்கொண்டே கமெண்ட் அடித்தது அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்தது.
