இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு காணொளி பார்ப்போரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் பாம் பீச் நகரில் நடந்த ஒரு அசாதாரண மீட்பு நடவடிக்கை நடந்துள்ளது. அதாவது 600 பவுண்டுகளுக்கு மேல் (சுமார் 270 கிலோ) எடையுள்ள ஒரு ஆணுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால், அவரது உடல் எடை காரணமாக, வீட்டின் கதவுகள் அல்லது படிக்கட்டுகள் வழியாக அவரை வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. எனவே, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் இணைந்து, ஒரு பெரிய கிரேனைப் பயன்படுத்தி, அவரை இரண்டாவது மாடியில் உள்ள அறையிலிருந்து மெதுவாக தூக்கி, கீழே காத்திருந்த மருத்துவ ஸ்ட்ரெச்சரில் வைத்தனர்.

இந்தக் காட்சி, இன்ஸ்டாகிராமில் @eddyshipek என்பவரால் “மிகவும் வருத்தமாக உள்ளது” என்ற குறிப்புடன் பகிரப்பட்டது. இந்த மீட்பு நிகழ்வு, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், இணையத்தில் உடல் பருமன் மற்றும் அதன் மருத்துவ சவால்கள் குறித்த பேச்சுகளைத் தூண்டியது. இத்தகைய பருமனான நபர்களை மீட்கவும், சிகிச்சை அளிக்கவும் சிறப்பு உபகரணங்கள் மற்றும் கவனமான திட்டமிடல் தேவைப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இவரது சிகிச்சை நிலை குறித்து இன்னும் தகவல் இல்லை என்றாலும், இந்தக் காணொளி உடல் நலம் மற்றும் பருமனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.