சென்னையில் உள்ள மெரினா கடற்கரை அருகே நடுக்குப்பம் மீனவ பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி, பாஜக மாநில செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற இருந்தது. ஆனால், காவல்துறையிடம் முறையான அனுமதி பெறப்படாத காரணத்தால், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் அகற்றப்பட்டன. பின்னர், காவல்துறை இணை ஆணையர் விஜயகுமாருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பேரில், ராயப்பேட்டையில் உள்ள துளுவ வேளாளர் சமுதாய நலவாழ்வு திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது.

இதனை கண்டித்து, பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பேரணியாக சென்று, அங்கு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில்:

“காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளன. இந்நிகழ்வை பிரதமர் உருக்கமாக பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மனதின் குரல் நிகழ்ச்சியில் முக்கிய நபர்களுடன் உரையாடும் பிரதமர், இந்த முறை மக்களோடு நேரில் பேசினார். கடந்த ஆண்டு இதே இடத்தில் அனுமதியுடன் நிகழ்ச்சி நடத்தினோம். ஆனால் இந்த ஆண்டு இணை ஆணையர் அனுமதி மறுத்துள்ளார்.” என்றார்.

மேலும், “இது துணை முதல்வர் உதயநிதியின் தொகுதியாக இருப்பதாலா என்ற சந்தேகம் உள்ளது. மக்கள் மாற்றத்தைக் கோருகிறார்கள். ஆட்சி நிரந்தரமல்ல. நிகழ்ச்சிக்கு ஒரு வாரமாக அனுமதி கடிதம் கொடுத்திருந்தும், இன்று பொது இடத்தில் நடத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார்கள். மண்டபத்தில் செய்தமைக்கு ஒரு வகையில் நன்றி. வெளியே வெயிலில் நடப்பதைவிட, இங்கு குளிர்ச்சியாக இருக்கிறது,” என்றார்.

இதனுடன், “விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ‘அதிமுக மற்றும் த.வெ.க கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டுவிட்டன’ என கூறியுள்ளார். திருமாவளவன் ஒரு கூட்டணியில் உள்ளவர். மற்றவர் வீட்டுக் கதவை மூட அவர் யார்? வேண்டுமானால் தன் வீட்டு கதவை மூடிக் கொள்ளட்டும் என்று கூறினார்.

மேலும் முன்னதாக தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும் அந்த கதவை மூடிவிட்டதாக திருமாவளவன் கூறியதோடு பாமக மற்றும் பாஜக கட்சிகள் இடம்பெறும் கூட்டணிகளும் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என்று கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.