அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்கனவே நிலவி வரும் கடுமையான மோதல் போக்கிற்கு மத்தியில், ஓமன் கடற்பகுதியில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடற்படையால் கடலுக்கடியில் மர்மமான முறையில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 300 கிலோ எடை கொண்ட ஈரானின் ‘மஹாம்-3’ ரக கண்ணிவெடிகளாக இவை இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அப்பகுதியில் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க கடற்படையால் இதுவரை இவற்றை அதிகாரப்பூர்வமாக கண்டறிய முடியாமல் போனது அமெரிக்காவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்தச் சம்பவத்திற்கு இடையே, ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அரசு மற்றும் ராணுவ அமைப்புகளுக்கு உதவும் வகையில் ஒரு புதிய ‘டிரோன் உதவி மையத்தை’அமைப்பதாக அறிவித்துள்ளது. இது ஈரான் எதிர்கால ட்ரோன் போர்முறைக்கு தீவிரமாகத் தயாராகி வருவதைக் காட்டுவதாக ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செயற்கை நுண்ணறிவு அவதார் வடிவிலான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ஈரானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதோடு, ஈரான் இன்னும் அமெரிக்காவின் உத்திகளை கணிக்க முடியாமல் திணறி வருவதையும் அது சுட்டிக்காட்டுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், கடந்த ஒன்றரை மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், முக்கியக் கருத்து வேறுபாடுகளில் இறுதி உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையின் அவசரக் கட்டுப்பாட்டு அறையில் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
