தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணியாற்றி வந்த மூட் கிஷன் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு (ACB) போலீசார், அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, மூட் கிஷன் ரூ.12.72 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், இந்த சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், மூட் கிஷன் பெற்றுள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.100 கோடி வரை இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மூட் கிஷன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 13 (1) (பி) மற்றும் 13 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.