ஆந்திர மாநிலம் அனந்தபூரில், தங்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தம்பதி ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி, பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தம்பதியின் வீட்டின் அருகே ஒரு கும்பல் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட தம்பதி, அந்தப் போதை கும்பலுக்கு எதிராகப் போலீசில் புகாரும் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், தம்பதியைத் பழிவாங்கக் கொடூரமான முடிவை எடுத்துள்ளது.
அந்தப் போதை கும்பல் தம்பதியின் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, வீட்டின் உள்ளே பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றுவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தம்பதியினர் தங்களுக்குப் பாதுகாப்பு கோரியும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மீண்டும் போலீசாரை அணுகியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பொதுப்பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியதோடு, போதை கும்பல்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை தேவை என்ற கோரிக்கையையும் வலுக்கச் செய்துள்ளது.
