கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் காபு தாலுகா சிருவா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தெரு நாயின் கழுத்தில் சங்கிலியை கட்டி அதனை தன்னுடைய ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் கட்டினார். பிறகு அவர் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிய நிலையில் சிறிது தூரம் ஓடிய நாய் பிறகு ஓட முடியாமல் விழுந்து விட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நாயை தரதரவென இழுத்தபடி அந்த நபர் வேகமாக ஸ்கூட்டரை ஓட்டியுள்ளார்.

இதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து வாயில்லா ஜீவனை இப்படி கொடுமைப்படுத்துவதா என்று கண்டித்தனர். பிறகு சிலர் அவரின் பிடியிலிருந்து அந்த நாயை விடுவித்தனர். இதனால் காயம் ஏற்பட்ட அந்த நாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.