சமீபகாலமாக ‘ஜென் ஜி’ இளைஞர்களிடையே சமூக வலைதளங்களில் பரவி வரும் ‘பெரோமோன்மேக்சிங்’ என்ற புதுவிதமான கலாச்சாரம், இணையத்தில் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்களைக் கவர்வதற்காகவும், தங்களிடம் ஈர்ப்பை உண்டாக்குவதற்காகவும் டேட்டிங் செல்வதற்கு முன்பாகக் குளிப்பதையே முற்றிலும் த தவிர்க்கும் விசித்திரமான பழக்கத்தை இந்தப் தலைமுறையினர் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

உடலின் இயற்கை மணத்திலும், வியர்வையிலும் சுரக்கும் ‘பெரோமோன்கள்’ என்ற வேதிப்பொருட்கள் பெண்களைக் கவரும் வல்லமை கொண்டவை என்ற தவறான அல்லது அரைகுறையான புரிதலின் அடிப்படையிலேயே இளைஞர்கள் இந்த ஆபத்தான மற்றும் சுகாதாரமற்ற முறையைப் பின்பற்றி வருகின்றனர்.

இயற்கையான உடல் மணம் பெண்களை ஈர்க்கும் என்பது அறிவியல்பூர்வமாக ஒரு குறிப்பிட்ட எல்லை வரை உண்மை என்றபோதிலும், குளிக்காமல் சேரும் வியர்வையும் பாக்டீரியாக்களும் இணைந்து வெளிப்படுத்தும் துர்நாற்றம் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வியர்வை தானாக துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை; மாறாக, தோலில் உள்ள பாக்டீரியாக்கள் வியர்வையோடு சேரும்போதுதான் அது கடுமையான துர்நாற்றமாக மாறுகிறது. இதனால், டேட்டிங் மூலம் துணையைக் கவர நினைக்கும் இளைஞர்கள், குளிக்காமல் செல்வதன் மூலம் ஈர்ப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தங்களுக்கே அறியாமல் துணையிடமிருந்து நிராகரிப்பையும் வெறுப்பையும்தான் அறுவடை செய்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிறது என்பதற்காகவே எதையும் ஆராயாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் போக்கு இளைஞர்களிடையே அதிகரித்து வருவதையே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

தனிநபர் சுகாதாரமும், சுத்தமான தோற்றமுமே ஒருவரிடம் நேர்மறையான எண்ணத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தும் என்ற அடிப்படை உண்மையைப் புறந்தள்ளிவிட்டு, இணையத்தின் தவறான வழிகாட்டுதல்களை நம்புவது ஆரோக்கியமான உறவுகளுக்கு வழிவகுக்காது.

இந்நிலையில் நவீனக் கலாச்சாரம் என்ற பெயரில் பரவி வரும் இத்தகைய தேவையற்ற மற்றும் சுகாதாரமற்ற ட்ரெண்டுகளைப் புறந்தள்ளி, தூய்மையையும் சுய சுகாதாரத்தையும் பேணுவதே நாகரிகமான சமூகத்திற்கு அழகாகும்.